11 November 2008

A WEDNESDAY




கடைக்கு போய் காய்கறி வாங்கிவரும் வழியில் ரொம்ப அசால்ட்டாக ரயில் நிலையம் , காவல் நிலையம் உட்பட ஜந்து இடங்களில் குண்டு வைத்துவிட்டு மனைவியுடன் பேசிக்கொண்டே வருகிறான் நமது கதையின் நாயகன் (வயது சுமார் 50 இருக்கலாம்).நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு பாழடைந்த மாடியில்,அவனுக்கு ஒரு குட்டி அலுவலகம் மாதிரி கனிணி, 5,6 செல்போனுடன் தயாராக இருக்கிறது .போலீசுக்கு, பாம் வைத்த தகவலை தெரிவிக்கிறான். அப்படியே தொலைக்காட்சி நிருபருக்கும் அவனே சொல்கிறான்.
பேசி முடித்த அடுத்த நிமிடம் சிம் கார்டை மாற்றி புது சிம்மிலிருந்து , மறுபடியும் போலீசுக்கு பேசுகிறான் . காவல் நிலையத்தில் பாம் வைத்திருக்கும் இடத்தை அவனே சொல்கிறான். போலீசின் ஒவ்வொறு நடவடிக்கையும் நேரடி ஒளிபரப்பு (தொலைக்காட்சி நிருபணருக்கு சொன்னது இதற்க்கு தான்)செய்தி மூலம் தெரிந்து கொள்கிறான்.
மேலும் 5 இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும் அதன் இடங்களைச்சொல்ல வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.
காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தும் அவன் பேசும் இடத்தைக்கூட கண்டு பிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது.அதனால் வேறு வழியில்லாமல் அவனின் கோரிக்கையை நிறைவேற்றுகிறது.
தீவிரவாதிகளை விடுவித்தவுடன் , அவர்களை அவன் சொன்ன இடத்தில் விட்டுவிட்டு போலீஸ் திரும்புகிறது. ஆனால் அந்த தீவிரவாதிகள் நிற்க்கும் இடத்தில் குண்டு வெடித்து அவர்கள் இறக்கின்றனர்..
அதன்பின் ,; ”நான் ஒரு சாதாரண குடிமகன் ,இந்த தீவிரவாதிகள் மும்பையில் குண்டு வைத்தவர்கள் ,எங்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை கெடுத்தவர்கள் “ என்கிறான். தான் குண்டு வைத்த மற்ற இடத்தைப்பற்றி சொல்கிறான்.”ஒவ்வொறு மனைவியும் கணவனுக்கு அடிக்கடி தொலைபேசியில் அழைத்து பேசுவது , அவன் உயிரோடு இருக்கிறானா என்று அறியத்தான் என்று நினைக்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும் , ஆனால் இன்று மும்பையில் வாழ்க்கையில் அது தான் ந்டந்து வருகிறது . அதனால் தான் அந்த தீவிரவாதிகளை கொன்றேன்”என்கிறான்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது , தீவிரவாதிகளை முஸ்ஸீம்களாக காட்டியதாக இருந்தாலும் , அவர்களின் உணர்வுகள் புண்படும்படாதபடி அழகாக படம் எடுக்கப்பட்டிறுக்கிறது.
இன்னொறு சிறப்பு அம்சம் என்னவெனில் ,கதையின் நாயகனின் பெயரை எங்கேயும் தெரியப்படித்தாதது. அதனால் அவனின் மதத்தையும் கண்டுபிக்கமுடியாதபடி அமைத்திருகிறார்கள்.
சிறுசிறு குறைகள் இருந்தாலும் அருமையான எடிட்டிங்கில் அதன் குறைகள் மறைக்கப்பட்டிருகிறது.

07 November 2008

நான் எப்படி?

எனது வேலை : கவிதை எழுதுவது , நாட்டுக்கு உழைப்பது , இமை பொழுதும் சோராதிருப்பது.........பாரதியார்
நீ பாட்டுக்கு பாடிட்டு போய்ட பாரதி........ எனக்கும் ஆசை தான்... திராணி இல்ல பா"...


கவிதை எழுதுவதிலுள்ள கவுரவம்நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைஉணர்ந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது" என்று சொன்ன புக்கார் வாஷிங்டன் கருத்தோடு ஒத்துப் போகிற ஆசாமி நான்.
அதன்படியே வாழ்வையும் அமைத்துக்கொள்ள முனைந்து வருகிறேன்.படிப்பது மிகவும் பிடித்த காரியங்களில் ஒன்று. அதை விட பேசுவது மிகவும் பிடிக்கும். எழுத்தை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு எழுதத்தெரியாதவன் நான்.
ஒவ்வொருவருக்கும் தன் எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை. மரணம் என்னை நெருங்கும் வரை எம்மக்களின் சுயத்தினை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது தவிர.. வேறெந்த ஆசைகளும் கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் வாழ் நாளில் தான் வாழும் சமூகத்தில், தன்னோடு வாழும் மக்களுக்காக "ஏதாவது" செய்து விட்டுப் போகவேண்டுமென்பது அடியேனின் ஆசை.
------------------------------------------------------------------------


அடுத்த வேளை உணவிற்கு அலையும்
ஏழைகளின் நிலை கண்டு
அவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பு
உன் இதயத்தில் எரிந்தால்...
நீயும் நானும் ஒன்று!

சதையை நம்பியும் முட்டாள் ரசிகர்களை நம்பியும்
எடுக்கப்படும் படங்களைக் கண்டு
உன்னால் குமுற முடிந்தால்..
நீயும் நானும் ஒன்று!

இந்திய மக்களை மேலும் மேலும் மூடர்களாக்கி
அந்த மூடத்தனத்தையே மூலதனமாக்கி சம்பாதிக்கும்
அரசியல்வாதிகளையும்
அந்நிய நாட்டு நிறுவனங்களையும்
உள்நாட்டு தொலைக்காட்சிகளையும்
விளம்பரங்கங்களையும்
கண்டு உன்னால் கொதிக்க முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!


வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!


குமுறினாலும் கொதித்தாலும்
கொந்தளித்தாலும் வேதனைப்பட்டாலும்
கையாலாகாத்தனத்தோடு
நீ உன் வழியே நடந்தால்
நீயும் நானும் ஒன்று!

15 August 2008

என்ன வருத்தம் கண்ணே உனக்கு


இப்பவே என்ன தாயி வருத்தம் ஒனக்கு? .உன் எதிர் காலம் பற்றியா, பள்ளியில் வாத்தியார் அடித்தாரா, நீ கேட்ட மிட்டாயை அம்மா வங்கித்தரவில்லையா ,இல்லை உன் தாய் உன் தந்தையிடம் படும் அவஸ்தைகளை நினைத்தா, நீ கொடுக்க வேண்டிய வரதட்சனையை நினைத்தா, உனக்கு தங்கையாக இருக்கவேண்டிய சிசுவை இன்னொரு பெண் வேண்டாம் என்று சொல்லி கலைக்கவைத்த தாத்தாப் பற்றியா?...
”இல்லை பெண்ணாக பிறந்துவிட்டோமே சோகப்பட்டு பழக்கிக்கொள்வோம் ,வருங்காலத்துக்கு உதவும் என்று தான்”..(இதையெல்லாம் பற்றி நமக்கென்ன கவலை, நான் சுதந்திரம் கொண்டாடிக்கொண்டே, ஒலிம்பிக் பார்ப்போம்)...
பொறுமையாக இருந்தது போதும் கண்ணே, இது அனைத்துக்கும் காரணம் இந்த சமூகம் தான். படி நிறைய படி....... கொத்தடிமையாக இன்னொருவரிடம் வேலை செய்ய தான் உனக்கு பள்ளியில் சொல்லித்தருகிறார்கள், அதையும் தாண்டி படி. வரலாறு படி, அசோகர் பற்றி மட்டுமல்ல , இந்த சமூகமே தாய்வழிச்சமூகம் என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் பெண்ணின் நிலை இருந்தது என்று உணர்.விஞ்ஞானம் படி, நம் உடம்பில் சுரப்பியினால் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் என்று தெரிந்துகொள். அறிவியல் படி , சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் அனைத்தும் பெண்ணை அடிமைப்படித்தும் ஆணாதிக்க சிந்தனை தான் என்றுணர்..
இந்த போலி சமூகத்தை விட்டு வெளியே வா. பெரியார் கண்ட சமூக மாற்றம் வரவேண்டும் என்றால் அது உன்போன்ற பெண்ணால் முடியும்...சீக்கிரம் வா

10 August 2008

MEGHE DHAKE TARA - சினிமா

வேலைக்கும் போகும் பெண்களை உங்களில் எத்தனைப் பேருக்குத்தெரியும்?. அதிலும் குறிப்பாக கல்யாண வயதைக்கடந்தும் தன் குடும்ப சூழ்நிலைக்காக எத்தனை பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல்,அலுவலகம் போகும் போதும் அலுவலகத்திலும் எத்தனை எத்தனை ஏளனப் பார்வைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
தன் தங்கைக்காக,தம்பிக்காக எத்தனை அக்காக்கள் தன் இளமையை தொலைத்திருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு அழகான அவலைப்பெண்ணின் கதைதான் MEGHE DHAKE TARA.


ஓய்வுப்பெற்ற ஆசிரியரான அப்பா, அம்மா,எந்த வேலைக்கும் போகாமல் பெரிய பாடகனாக வருவேன் என்று சுத்திக்கொண்டிருக்கும் அண்ணன், கல்லூரிக்குப் போகும் தம்பி , சதா கண்ணாடியில் தன் அழகையே பார்த்துக்கொண்டிருக்கும் தங்கை என நீதாவின் குடும்பம் பெரியது. அப்பாவின் வருமானம் போதாததால் தன் கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் டீயூசன் எடுத்து சம்பாதிக்கிறாள் நீதா.

தன் அண்ணனின் லட்சியத்தை மதிக்கும் நீனா , என்றாவது அவன் சாதிப்பான் என்று எல்லோரிடம் சொல்லிவருகிறாள்.ஆனால் அவனின் அன்றாட தேவைகளுக்கு கூட நீனாவையே சார்ந்திருக்கிறான். நீதாவுக்கும் அவள் அண்ணனுக்கும் நெருக்கமாக பாசம் இருக்கிறது. சிறு வயதில் அவனுடன் ஒரு மலைக்கு போகும் போது எடுத்த புகைப்படத்தை தன் அறையில் எப்போதும் தன் உடனே வைத்திருக்கிறாள்.

ஒரு நாள் சாப்பிடும் போது ஒரே சேலையைக் கட்டிக்கொண்டு தினமும் கல்லூரிக்கு போக முடியாதென்று நீதாவின் தங்கை கீதாவும் , விளையாட்டுப் போட்டிக்கு சூ வாங்க வேண்டும் என்று அவளின் தம்பியும் அம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்துக்கொண்டு இந்த செலவையெல்லாம் செய்ய முடியாது என்று அம்மா திட்டுகிறாள்.
தம்பி தங்கையின் ஆசையை புரிந்து கொள்ளும் நீதா, தான் டியூசன் எடுத்து சம்பாதிக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுக்கிறாள்.

இதற்க்கிடையில் தன் அப்பாவிடம் படித்த பழைய மாணவனான சனத்பாபுக்கும், நீதாக்கும் காதல் மலருகிறது.இருவருக்கும் கடிதபரிமாற்றத்திற்க்கு தங்கை கீதா உதவிசெய்கிறாள். அ வர்களின் காதலும் வளர்கிறது. அடிக்கடி வெளியே சந்திக்கிறார்கள். ஒரு நாள் சனத்பாபுவை சந்தித்துவிட்டு வரும் நீதாவுக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவளின் அப்பா கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்ப்படிருக்கிறது. அதனால் அவரால் இனிமேல் எந்த வேலையும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் அவரை வீட்டிலேயே உக்கார வைத்து விட்டு நீதா வேலைக்கு செல்கிறாள்.
நீதா வேலைக்கு செல்வது அவளின் காதலனான சனத்துக்குப் பிடிக்கவில்லை. அவள் படித்தால் தான் தன் வீட்டில் ஒத்துக்கொள்வார்கள் என்கிறான். ஆனால் குடும்ப நிலைக்காக நீதா வேலைக்கு செல்வேன் என்கிறாள் நீதா. அவர்களின் பேச்சு முற்றி இருவரும் பிரிகிறார்கள்.

நீதா தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.சனத்தும் கீதாவும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள், அவர்களின் சிநேகிதம் காதலில் முடிவடைகிறது. இருவரும் பெற்றோரிடம் பேசுகிறார்கள். மூத்தவள் நீதா இருக்கும் போது இளையவள் கீதாவுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவது என்று அப்பா கேட்கிறார். ”சம்பாதிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு சோத்துக்கு என்ன பண்ணப்போறீங்க” என்கிறாள். அப்பா வாயடைத்து நிற்க்கிறார்.

சனத்துக்கும் கீதாவுக்கும் திருமணம் நடக்கிறது. தன் பழைய காதலனின் திருமணத்தில் கலங்கிய விழிகளுடன் நீதா இருக்கிறாள். இந்த திருமணம் பிடிக்காமல் நீதாவின் அண்ணன் சங்கர் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

நீதா அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டேயிருக்கிறாள். அதிகமாக வேலை செய்ததால் அவளின் உடல்நிலை மோசமாகிறது, அதனால் வீட்டின் வெளியே உள்ள தனிஅறையில் தங்கத்தொடங்குகிறாள்.

பம்பாயிக்கு போன சங்கர் பெரிய பாடகனாக திரும்பி வருகிறான்.
அவனை கேலிசெய்த ஊர் இன்று அவனை பாராட்டி வரவேற்க்கிறது. அதே நேரம் பிரசவத்துக்காக வீட்டிக்கு வந்திருக்கும் கீதா அண்ணனிடம் நெக்லஸ் கேட்கிறாள் , அம்மா மாடி வீடு கட்ட வேண்டும் என்கிறாள். ஆனால் சங்கரோ நீதா எங்கே என்று முதலில் கேட்கிறான்.

வீட்டிலேயே ஒரு தனி அறையில் நீதா இருக்கிறாள். அங்கே போன பின் தான் அவளுக்கு கடுமையான காச நோய் இருப்பதை சங்கர் அறிகிறான். சங்கரின் இன்றைய நிலையைப் பார்த்து நீதா சந்தோசப்படுகிறாள். அவளின் மருத்துவத்துக்காக சங்கர் ஏற்ப்பாடு செய்கிறான்.

சிறுவயதில் சங்கரும் நீதாவும் சென்ற மலைக்கு மறுபடியும் போகிறார்கள். அங்கே அமர்ந்து நீதா தனது பழைய காதல் கடிதத்தைப் படித்த அழுகிறாள். இப்போது குடும்பம் நல்ல நிலையில் இருப்பதாக சங்கர் சொல்கிறான். எல்லாவற்றையும் கேட்ட நீதா, “எனக்கு இப்போ வாழனும்னு ஆசையா இருக்கு “ என்று அழுகிறாள்.


------

குடுப்பத்தின் நலனுக்காக தன்னையே இழந்து ,இன்று குடும்பம் நல்ல நிலைக்கு வந்தவுடன் வாழ ஆசைப்படும் நீதாவின் சொற்க்கள் நியாயமானதாக இருந்தாலும்,அவள் இழந்தது இழந்தது தான்.அந்த உண்மை நமக்கு உறுத்தும் போது கண்ணீர்விடாதவர்களே இருக்கமுடியாது.இன்றும் குடும்பத்தின் நலனுக்காக தனது இழமையை, தனது காதலை தொலைத்து விட்டு டிபன் பாக்ஸோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் எத்தனை பேர்.அவர்களின் ஆசைகளை தியாகம் செய்துகொண்டு தான் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுகிறது.

அற்ப்புதமான ஒளிப்பதிவும் , இசையும் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம்.இந்தியக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும், குடும்பத்துக்காக கனவுகளையும் விருப்பங்களையும் இழந்து நிற்க்கும் பெண்களின் உணர்ச்சிகளை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

படம் பார்த்த பல மணிநேரம் கழித்தும் “ நான் வாழ வேண்டும்... நான் வாழவேண்டும்” என்னும் நீதாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது..

1960 ல் வெளியான இந்தப்படம் இன்றும் ‘மிகச்சிறந்த படங்களின் வரிசையில்’ இருக்கிறது..

Cast: Supriya Choudhury, Anil Chatterjee, Niranjan Ray

Director: Ritwik Ghatak

03 August 2008

கேள்வியும் நானே பதிலும் நானே


கேள்வி: எதற்க்காக இந்த தளம்?
பதில்: பல நல்ல பிறமொழி திரைப்படங்களை அறிமுகப்படுத்தவும், அதைப் பற்றி விவாதிக்கவும்,அதன் மூலம் நம் மக்கள் பல்வேறு நாட்டின் கலைத்திறனையும் ,கலாச்சாரத்தையும், வியக்கவும் ரசிக்கவும் முடியும்.அவர்களிடம் சினிமா என்றால் என்ன என்பது விளங்கி அதன் மூலம் தமிழ் சினிமாவின் தற்ப்போதைய போக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும்.இந்த கள உறுப்பினர்கள் அதை தொடங்கிவைப்பார்கள், சிறுதுளி பெருவெள்ளம் என்பதை நம்புவர்கள் நாங்கள்.

தமிழ்சினிமாவில் என்ன மாற்றம் வேண்டும்?

எங்களுக்கான சினிமா இல்லை இது. அங்கேயெல்லாம் சினிமாவை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார்கள், நாம் மட்டும் அது ஏதோ வானத்தில் நடப்பதைப்போல் கதை அமைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்களுக்கு தெரிந்தவரை இந்தியாவில் மாதச்சம்பளம் வாங்குபவனும்,விவசாயியும் தான் அதிகமாக வாழ்கிறார்கள்.ஆனால் எங்கள் நாயகன் யாரும் விவசாயியாகவோ மாதச்சம்பிளக்காரனாகவோ நடிப்பதில்லை.அப்படியே ஒரு படம் எடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளமுடியாதபடி மக்களின் மனநிலையை மாற்றிவைத்திருக்கிறார்கள்.அஞ்சு பாட்டும்,சண்டையையும் வைத்துக்கொண்டு சினிமாவை முடித்துவிடலாம் என்பது தான் இங்கே பெரும்பான்மையான கருத்து. நமக்கு பக்கத்து நாடான் ஈழத்திலிருந்து கூட அருமையான படங்கள் வரும் போது நாம் மட்டும் இன்னும் பாட்டையும் சதையையும் மட்டும் நம்பி படம் எடுக்கிறோம்.

சரி , பாட்டே இல்லாமல் தமிழ் சினிமா எடுத்தா , அதை நல்ல சினிமா னு ஏத்துப்பீங்களா?

என்ன கேள்வி இது, வெள்ளிக்கிழமையின் ஒளியும் ஒலியும் கேட்டு தான் எங்களில் பல பேர் தூங்கியிருக்கோம். இளையராஜா இசையமைக்க ஆரம்பித்த பின் எந்த தாயும் தாலாட்டு பாடுவதாக தெரியவில்லை.அதனால் இசையின் முக்கியத்துவமும் மகத்துவமும் எங்களுக்கும் தெரியும். சினிமாவில் பாட்டு என்பது வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் இஷ்டம், ஆனால் சினிமாவை சினிமாவா எடுங்க .

எதுக்காக சினிமாவை மாத்தனும்னு சொல்றீங்க?

சினிமா என்பது ஒரு அற்ப்புதமான் ஆயுதம்,நாம் அதை வைத்து முதுகு சொறிந்து கொண்டிருக்கிறோம்.
சனிக்கிழமையின் சினிமாவுக்காக தனது மாச Budjet ல் கொஞ்சம் ஒதுக்கிவைத்து உங்ககிட்டவந்து கொடுக்கிறானே அவனுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா, அதனால் அவனுக்காகவேனும்,
தமிழ்சினிமாவின் இந்தநிலையிலும் அதை நம்பி வடபழனியிலும் சாலிகிராமத்திலும், சிகரெட்டை மட்டுமே உணவாக கொண்டு, பல வருடம் பசியோடு இருந்தாலும் , தமிழ் சினிமாவில் உலகத்தரத்துக்கு நான் படம் எடுப்பேன் என்று நம்பி ஆயிரம் பேருக்கு மேல் உதவி இயக்குனராய் சுற்றிவருகிறார்கள், அவர்க்காகவேனும்,

தமிழ்சினிமாவின் போக்கு மாறித்தான் ஆகவேண்டும்.

தமிழ்சினிமாவில் நல்ல படமே இல்லை என்கிறீர்களா?

நாங்கள் என்ன தான் பிறமொழி படம் பார்த்தாலும் எங்களுக்கு அங்குலம் அங்குலமாக சினிமாவை ரசிக்க கற்றுக்கொடுத்தது “ உதிரிப்பூக்கள் “ தான். அது ஒரு புத்தகம் போல், எங்களுக்கு தொழில் (சினிமா) சொல்லிக்கொடுத்தது. ”முள்ளும் மலரும்” ,சத்தியமாக தமிழுக்கு இலக்கணம் எழுதியது யாருன்னு தெரியாது ஆனால் தமிழ் சினிமாவுக்கு மகேந்திரன் தான். இது மாதிரி மொத்தமா பார்த்தா ஒரு பத்து படம் தேர்ரதே கஷ்டம். மிச்ச இருக்கிறதெல்லாம் குப்பைங்க.
(குப்பைங்க-கடுமையாக இருந்தாலும் அது நிதர்சனமான உண்மை).ஆம் நண்பர்களே நாம் இது வரை பார்த்தது எல்லாம் படங்களே இல்லை , சினிமாவே இல்லை . மெருகேற்றிய நீலப்படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நல்ல படம் பார்ப்போம்.... நல்ல படம் மட்டுமே பார்ப்போம்...
நல்ல படம் எடுப்போம் .. நல்ல படம் மட்டுமே எடுப்போம்.

02 August 2008

உலக சினிமா – இந்த பாமரனின் பார்வையில்


பள்ளிக்காலங்களில் நண்பர்கள் புடைசூள, சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு போகமுடியாத்தால் தான் அடிக்கடி திரை அரங்குகளுக்கு சென்று வந்திருக்கிறேன்.அது வரை சினிமா மீது துளியும் ஆர்வம் இல்லாமல், சரக்கு அடிப்பது,இல்லையேல் புத்தகம் புத்தகம் என்று இருந்திருக்கிறேன்.


கல்லூரிக்காக சென்னை வந்த பின் திரைவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் தயவினாலும், வழிகாட்டினதாலும் கடந்த சில வருடங்களாக நான் பல அருமையான படங்களைப் ரசித்திருக்கிறேன்.

அடிதடி,ஒரு பாட்டு கூட இல்லாத சினிமாவை ரசிக்க ஆரம்பித்து , பின் அதன் மேல் காதல் வயப்பட்டது அப்போது தான்.ஒரு அளவுக்கு மேல்,உலக சினிமாவுக்கு ஒரு அடிமைபோல் , தினம் ஒரு படமாவது பார்க்க வேண்டும் என்ற அளவுக்கு,சோத்துக்கே வழியில்லாதப்ப கூட பார்சன் காம்ப்ளக்‌ஸ் வாசலில் போய் நின்றிருக்கிறேன். சில நாட்கள் கடன் சொல்லியாவது சிடி வாங்கிவந்து பார்த்தாக வேண்டிய அளவுக்கு வெறியனாகவே மாறியிருந்தேன்.

இன்று வரும் தமிழ் சினிமா மீதுள்ள கோபமும்,நான் பார்த்து ரசித்த பிற மொழிப்படங்களின் தாக்கமும், கடந்த சில வருடங்களாகவே திரைஅரங்கத்திற்க்கு செல்வதை விட்டு விட்டேன்.எத்தனையோ சினிமா பார்த்தாலும், யாரேனும் “ நல்ல சினிமா எப்படி இருக்கணும் “ என்றால் தயங்காமல் சொல்வேன் “உதிரிப்பூக்கள்” .அந்தப்படத்தைப் பார்த்தாலே போதும், ஒரு நல்ல சினிமாவின் இலக்கணம் புரிந்துவிடும்.

சினிமா என்பது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படவேண்டும், அது ஏதோ எங்குமே நடக்காத சம்பவங்களை மட்டும் கொண்டிருக்க கூடாது. (ஒருவனே பத்து பேரை அடிப்பது, காதல் வசப்பட்டால் பாட்டு உடனே எப்படித்தான் வருதோ).உலக சினிமாவில் பிண்ணனி இசை என்பது நடக்கும் சம்பவங்களை நம் மூளையையும் தாண்டி உணர்வுகளை தொட்டு இழுக்க பயன்படுத்துகிறார்கள். நாம் தான் இன்னும் தையதக்கானு குதிச்சிட்டு இருக்கோம்.

நான் பார்த்த படங்கள் பல நாட்கள் இரவு தூக்கத்தை விழுங்கியிருக்கிறது.நாயகனும் நாயகனும் ஒன்னு சேர வேண்டும் இல்லேனா பிரிய வேண்டும் , இது தான் தமிழ் படங்களின் தலையெழுத்து, ஆனால் உலக சினிமாவில்(நிறைய படங்களில்) இறுதியில் மெல்லிய இசையுடம் முடிவை நம் தலையில் இறக்கிவிட்டு, அவங்க பாட்டுக்கு போய்டுவாங்க இரவு பூரா அவங்களுக்காக அழுதிருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பாட்டியையும் பேரனையும் மட்டும் வைத்துக்கொண்டு எடுத்த “The Way Home” ல் , அந்த பாட்டிக்காக நான் உண்ர்ச்சி வசப்பட்டது என் வாழ்வில் வேறு எப்போது நடந்திராதது. ஒரு படத்தின் வெற்றி என்பது இது தான் , பார்ப்பவர்களின் மனதில் ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். அந்த தாக்கம் குறைந்தபச்ச்ம் ஒரு நாளாவது நம்மளை பாடாய் படுத்தணும்.

இது எல்லாம் இருக்கிறது உலக சினிமா, எதுவுமே இல்லாம அஞ்சு பாட்டும் , ஒரு சண்டையும் உள்ளது நம்ம சினிமா...


07 March 2008

பெண் என்றாலே அழகு தான்







அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!


இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜேர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!.

02 March 2008

கனவுக்கன்னி குஷ்பு


குஷ்புக்கு கோயில் கட்டும் அளவுக்கு அவரை பல வருடங்களாக எனக்கு பிடிக்கும். சென்னைக்கு வந்து ஒண்டிக்கட்டையாக வாழ ஆரம்பித்த பல வருடங்களாக தொலைக்காட்சியையே பார்க்க வாய்ப்பு கிடைக்காதவன் ,இன்று ஜெயா டிவியில் குஷ்பு நடத்தும் ஜாக்பாட் நிகழ்ச்சியை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.
இன்று அரவாணிகள் பங்குபெரும் ஜாக்பாட் நிகழ்ச்சி . வழக்கம் போல் அதே அழகான குஷ்பு தான் நிகழ்ச்சியை நடத்தினார்.ஆரம்பம் முதல் அரவாணிகளை மதித்து பேசியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. போட்டியை வழக்கமாக நடத்திக்கொண்டே இருந்த குஷ்பு , இடையிடையே பல சங்கதிகளை சாதாரமாக கூறிக்கொண்டே இருந்தார். “UNDERSTAND AND ACCEPT THEM AS THEY ARE “ ,”என் உடம்பிலும் உங்கள் உடம்பிலும் இரத்தம் தான் இருக்குது, பின் நமக்குள் என்ன வித்தியாசம்” போன்று பல விஷயங்களை கூறும்போது குஷ்பு மீது மரியாதை வந்தது என்னவோ உண்மை.
இதே போல் நிர்வாணம் செய்வது, அவர்கள் சமூகத்தில் நடத்தப்படும் விதம் குறித்தும் பேசியனார். பின் பங்கு பெற்ற அரவாணிகள் தங்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை அவர்களே கூறினர்.தங்களின் அங்கிகாரத்திற்க்காக அவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
நான் பார்ப்பது ஜெயா டிவிதானா என்று சிறு ஜயம்கூட வந்தது. எப்படியோ அவர்களின் கூக்குரல் சத்தமாகிக்கொண்டே வருவது என்னமோ உண்மை. நிகழ்ச்சியை நட்த்திய தலைவிக்கும், அதை அனுமதித்த இயக்குனருக்கும் , நன்றிகள்.

முக்கிய குறிப்பு:
என்னால் தனியாக ஒரு புத்தகம் எழுதி, அதன் முன்னுரையில் நன்றி கூற முடியாது. அதனால் இங்கேயே இப்போதே கூறுகிறேன். ஜயா , எனக்கு அரவாணிகளைப் பற்றி எடுத்துக்கூறி, இந்த மரமண்டையும் கொஞ்சம் யோசிக்க வைத்த அண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் ( பெயர் சொன்னா , ஏண்டா சொன்னன்னு அடிப்பாரு).

07 February 2008

NHM WRITER- தமிழில் எழுத


இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி. பதிவுலக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ”New Horizon Media நிறுவனம் ஒரு புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கியிருக்காங்க. Demo காட்டப் போறாங்க. வர்றியா?” என்று ‘சாட்டர்டே டிஸ்கோதேவுக்கு வர்றியா?' பாணியில் கேட்டிருந்தார். நான் பயன்படுத்தும் தமிழ் மென்பொருள் எனக்கு திருப்திகரமாக இருந்தபோதிலும் புதியதாக என்னதான் செய்திருப்பார்கள் என்று Demoவுக்கு கிளம்பினேன். உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள். இருவாரங்களாக NHM Writer மூலமாகத் தான் தமிழில் தட்டச்சிடுகிறேன். சுலபமாகவே இருக்கிறது. தங்கிலீஷில் தட்டச்சினால் கூட மற்ற சாப்ட்வேர்களுக்கும், பாண்டுகளுக்கும் மிக சுலபமாக கன்வெர்ட்டு செய்யமுடிகிறது. * மொத்த மென்பொருளுமே 850 KBக்குள் இருப்பதால் தடாலடியாக டவுன்லோடு ஆகிறது. ஓரிரு நொடிகளில் கணினியில் நிறுவப்படுகிறது. * வேகம், வேகம், அதிரடி வேகம் - இதுவே இந்த மென்பொருளின் சிறப்பம்சம். ஒரு பெரிய கட்டுரையை பாண்டு கன்வெர்ட்டு செய்ய இனிமேல் தாவூ தீர்ந்துப் போய் உட்காரவேண்டியதில்லை. டவுசர் அவுக்கும் வேகத்தில் NHM Converter மூலமாக பைபிளை கூட கன்வெர்டு செய்யமுடியும். * என்னைப் போன்ற தொழில்நுட்ப அறிவிலிகளுக்கு Regional Language Support போன்ற வார்த்தைகளை கண்டதுமே காண்டு ஆகிவிடும். யாராவது தொழில்நுட்பம் தெரிந்தவரை வரவழைத்து ஒரிஜினல் (?) சிடி கொண்டு Install செய்யவேண்டும். அதுபோன்ற தொல்லைகள் எதுவுமில்லாமல் இந்த மென்பொருளை நிறுவினால் அதுவே இந்த கச்சடா வேலைகளை கவனித்துக் கொள்ளுகிறது. நோகாமல் நோன்பு கும்பிடலாம். * தமிழ்99, தங்கிலீஷு, டைப்ரைட்டிங் தமிழ், பாமினி என்று ஐந்துமுறைகளிலும் மிக சுலபமாக தட்டச்சலாம். அதுமட்டுமில்லாமல் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode ஆகிய கும்மிகளின் எழுத்துருக்களையும் பயன்படுத்த முடியும் என்பதால் DTP தொழில் மற்றும் பதிப்பகத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். * Key Preview வசதி இருப்பதால் செம தூளாக இருக்கிறது. * இது மிக விரைவில் ஓபன் சோர்ஸோ என்னவோ, ஏதோ ஒரு டெக்னிக்கல் டெர்ம் சொன்னார்கள். அந்த முறையில் வெளிவர இருப்பதால் உலகத்தில் இருக்கும் எந்த மொழியையும் மிக சுலபமாக உள்ளீடு செய்து தட்டச்சலாம் என்றார்கள். * இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்த மென்பொருள் சிடி வடிவில் (மிகக் குறைந்த விலையில்) உலகத் தமிழர்களை சென்றடையப் போகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. * எல்லாவற்றையும் விட மிகப்பெரிய விஷயம். இதை இலவசமாகவே பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்கள். New Horizon Media நிறுவனத்தின் பதிப்பக வேலைகளுக்காக துட்டு செலவு செய்து தயார் செய்யப்பட்ட இந்த மென்பொருளை இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் முடிவு எடுத்த திரு. பத்ரி அவர்களுக்கும், இரவு-பகலாக உழைத்து அட்டகாசமான மென்பொருளை உருவாக்கிய திரு. நாகராஜ் அவர்களுக்கு நன்றி கூற தமிழ்தட்டச்சும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது.


இங்கே க்ளிக்கி உபயோகிக்க ஆரம்பிக்கவும்.


06 February 2008

கதையென்றும் சொல்லலாம்

ஒரு வாரம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நெல்லைக்கு சென்றிருந்தேன். போன முதல் நாளே, நண்பர்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினேன். “தமிழக அரசே! கலைஞர் அரசே! கட்டுப்படுத்து கட்டுப்படுத்து “, குரல் வந்த திசையை நோக்கி திரும்பினேன்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட்டுகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள்.தோழர்கள் மீது என்றுமே எனக்கு மரியாதை இருந்ததால் அங்கேயே நின்று அவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.அவர்களின் கோஷ சப்தம் கூடிக்கொண்டே இருந்தது.அந்த கோஷ்ம் என் கல்லூரி காலத்தை நினைவுப்படுத்தியது.

சில வருடங்களுக்கு முன், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ராமேஸ்வரத்திலிருந்து வந்த கிருஷ்ணன் என்ற நண்பனின் அறிமுகம் கிடைத்தது.மிகுந்த முற்ப்போக்கு எண்ணமும் இடதுசாரி சிந்தனையும் உள்ளவன். அவனின் நட்பின் மூலம் என்னிடம் பல மாறுதல்கள் ஏற்ப்பட்டது.அதில் ஒன்று தான் நானும் அவனைப்போலவே கட்சியில் சேர்ந்தது. நான் கட்சியில் இருந்தாலும் தோழர்களின் தவற்றை சுட்டிக்காட்ட தவறியதில்லை.இதனால் எனக்கும் கிருஷ்ணனுக்கும் சண்டை வரும் அளவுக்கு கட்சியின் கொட்டை தாங்கியாகவே மாறியிருந்தான்.

சமூகவிதி சொல்பவர்கள் ஆயுதபூஜை கொண்டாடுவதையும் தீபாவளிக்கு தீக்கதிர் இதழுடன் தீபாவளி மலர் வெளியிடுவதும் வியாபார நோக்கத்துடன் தான் என்றால் , “ சமூகத்தோடு சேர்ந்து தான் புரட்சி செய்யமுடியும் “ என்ற நொட்டை விளக்க்ம் வேறு. அதே தீவாவளி மலரில், நடிகைகளுடைய பேட்டியும்,சில சமயம் பி.ஜே.பியின் விளம்பரமும் அடிமட்ட தொண்டனை குழப்பாமல் இருந்தால் தான் ஆச்சிரியம்.

வேலை கிடைத்து சென்னை வந்துவிட்ட்தால் , கட்சியைப்பறி யோசிக்க்கூட முடியாமல் போய்விட்டது.
காக்கி சட்டைகளின் சப்தம் நினைவுகளை கலைத்தது.சாலை மறியலில் ஈடுபட்டிருந்தோர் காவலர்களைக் கண்டதும் குரல்களை உயர்த்தினர். அவர்களை கைது செய்ய காக்கிகளும் , படமெடுத்து செய்தியாக்க நிருபர்களும் சூழ்ந்தனர்.


”இப்படிவாங்க தோழர், கொடி இந்தாங்க, நீங்க கண்ணாடி போட்டுக்கோங்க தோழர் , தோழர் நீங்களும் வாங்க. அட முடி கலைஞ்சிருக்கு பாருங்க, இந்தாங்க சீப்பு, ம்ம்ம் எல்லாரும் வந்தாச்சாப்பா , இப்ப போட்ட எடுங்க தோழர் “, புகைப்படம் எடுக்கவந்த செய்தியாளரைப் பார்த்து தோழர் ஒருவர் சொன்னது.நிருபர்களை சந்தித்த பின் ,அமைதியாக வண்டியில் அமர்ந்து காவல் நிலையம் சென்று அன்று மாலையே வீடு திருப்பினர்.

இதுவரை நடந்த எல்லா போராட்டங்களும் இப்படித்தான் நடந்திருக்கு , இப்படித்தான் முடிஞ்சிருக்கு “.


04 February 2008

சுதந்திரப் போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன்



எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல்
ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.
இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.


நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும். நான் நெல்லை சென்றிருந்தபோது படமெடுத்து வைத்திருந்த ஆஷின் கல்லறையை இங்கே கொடுத்திருக்கிறேன்.

ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

02 February 2008

யார் சொல்ல யார் எழுதியது

இரண்டு நாட்களாக வீட்டைவிட்டு வெளியே போகமுடியாத அளவுக்கு காய்ச்சலில் படுத்திருந்தேன். இளையராஜாவின் இசையில் செல்பேசி ஒலித்தது.வலையுலகின் மூத்தபதிவர் அழைத்திருந்தார்.பொதுவாக மொக்கை கும்மிகளுக்கு மட்டுமே அழைக்கும் அவர் இன்று எதோ முக்கியமான செய்தி என்று பீடிகையுடனே ஆரம்பித்தார்.கண் பார்வை இழந்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் தேர்வு நடந்துகொண்டிருப்பதாகவும்,அவர்கள் சொல்ல சொல்ல நாம் எழுத வேண்டும் என்றும், என்னால் அப்படி எழுத முடியுமா என்றும் கேட்டிருந்தார். சரி தல சொன்னதுக்கப்புறம் மறுபேச்சு ஏது என்று அவர் கொடுத்த எண்னை தொடர்பு கொண்டு, திரு. மேத்தியூவிடம் பேசி, நாளை வருவதாக பதிவு செய்துகொண்டேன்.

மறுநாள் என் பரீச்சைக்கு செல்வது போல ஒருவித பதற்றத்தோடனேயே கிளம்பினேன். 12:30 மணி பரிச்சைக்கு 11;45 க்கு வண்டியை தட்டினேன். சுமார் அரைமணி நேரத்தில் லயோலா கல்லூரி. மேத்யூக்கு தொலைபேசியில் அழைத்தால், தான் ஏதோ முக்கியமான வேலையில் இருப்பதாகவும் தேர்வு அறைக்கு சென்றுவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.சரியென்று தேர்வு அறையை தேடிச் செல்வதற்க்குள் தாவு தீர்துவிட்ட்து. ( எவ்வளவு பெருசா கட்டிருக்கானுங்க).அங்கு சென்று தேர்வு மேற்ப்பார்வையாளரிடம் ஒரு சலாம் போட்டு அறிமுகம் செய்து கொண்டேன்.அவரின் முதல் கேள்வியே அதிர்சியாக்கியது.
தமிழ் தெரியுமா ? , என்றார். இவ்வளவு நேரம் நாம் தமிழில் தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றேன் (நம்ம பட்டிக்காட்டு பாஷையையும் மூஞ்சியையும் பார்த்து ஆங்கிலம் தெரியுமானு கேட்டிருந்தால் நியாயம்). அவரே விளக்கினார், அங்கு ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் மாணவனுக்கு தேர்வு எழுதுவதாக சொன்னவர் வரவில்லையென்றும், எனக்கு முன் இதே போல் தேர்வு எழுத வந்திருந்த பல பேருக்கு தமிழ் எழுதுவதில் தகராறு என்றார். நானும் சரியென்று எழுத ஆரம்பிக்கும் போது பதிவுசெய்திருந்த நபர் வந்த்தால் வேறுஒரு மாணவனுக்கு ஆங்கில பரீச்சை எழுத ஆரம்பித்தேன்.

தேர்வு எழுத தரப்பட்ட தாளில் “ WRITTEN BY SCRIBE “ என்று அச்சடிக்கப்பட்டிருந்த்து. இதன் மூலம் அந்த விடைத்தாள் கண் பார்வை இழந்தவர்களுக்காக மற்றவர்களால் எழுதப்பட்ட்து என்று திருத்துபவருக்கு தெரிவிக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட விடைத்தாளில் உள்ள எழுத்துப்பிழைகள் கண்டுகொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிந்துகொண்டேன்.

நான் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நபர் , தழிழ் துறையை சார்ந்தவர். தமிழில் நல்ல ஆர்வம் உள்ளவர் . ஆனால் அத்துறையில் வேறு ஏதேனும் ஒரு மொழியை முதலாம் ஆண்டு மட்டும் எழுத வேண்டும் போல , அதனால் ஆங்கிலத்தை தேர்வு செய்திருந்தார்.நான் அங்கு சென்றது அவர் சொல்வதை அப்படியே எழுதுவதற்க்கு. ஆனால் அவரால் ஒரு வாக்கியத்தைக்கூட தப்பில்லாமல் ஆங்கிலத்தில் சொல்ல முடியவில்லை. (இதை குறையாக சொல்லவில்லை , நட்ந்தது அப்படியே பதிவு செய்யப்படுகிறது.). வேறு வழியில்லாமல் நானே தேர்வை முழுவதும் எழுதவேண்டியதாகி விட்டது. நல்லவேளை கேள்வி நம்ம தம்மாத்துண்டு அறிவுக்கு எட்டியதால் , எப்படியும் அவர் தேரிடுவார்.
எழுதி முடித்துவிட்டு ஒருவித மனநிறைவோடு கிளம்பும்போது தான் மேத்யூவை சந்தித்தேன் . அவரிடமும் ஒரு வணக்கத்தையும் அறிமுகத்தையும் வைத்துவிட்டு கிளம்பினேன். கல்லூரியில் இருந்து வண்டி நிறுத்தம் வரை நடக்கும் போது , தலைக்கும் ஒரு நன்றியை தெரிவித்து விட்டு(தொலைபேசியில் தான்) வண்டியைக் கிளம்பும் போது தான் காலில் எதோ உறுத்தியது, மூன்று உபயோகப்படுத்தப்பட்ட ஆணுறைகள்.

துப்பட்டா போட்ட பெண்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் என்று நினைக்கும் கற்ப்புக் காவலர்களின் நிர்வாகம் அது. துப்பட்டா போட்ட பெண்கள் மட்டுமே தன் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கும் கல்லூரி, ஆண்மகன்களின் கற்ப்பைக் காக்க ஆணுறையை பரிந்துரைக்கிரார்களோ என்னவோ. வந்தோமா பரீச்சை எழுதினோமா போனோமானு இல்லாம நமக்கெதுக்கு ஊர் வம்பு .

24 January 2008

'தலை' ப்புச் செய்திகள்


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , இன்று முதல் எங்கள் அன்பு அண்ணன், (தல பாலா) தன் 60வது வயதில் காலடி எடுத்துவைக்கிறார். இதை பாசமிகு பார்டிகளுக்கு!! அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று மாலை அவர் அலுவலகத்தின் முன் கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தள்ளாத வயதில் தனக்கு எதுக்கு இதெல்லாம் என்று (காசி ) ராமேஸ்வரம் போய்விட்டதால் கொண்டாட்டங்கள் ரத்துசெய்யப்படுகிறது . (அடுத்த வருசம் ரஜினி மாதிரி இமயமலை போவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். )


(பி.கு. இந்த வயசுலையாவது அவருக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று அனைத்து சாமிகளையும் , பெண்களை பெத்த அனைத்து அப்பன்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். )


18 January 2008

இது தான் பார்ப்பனியம்

நமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).


ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.


வளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன?)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.


பிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).

தலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.

13 January 2008

உங்கள் மனநிலை எப்படி?

பொதுவாகவே நாம் ஒரு பண்டிகைனாலோ ,ஒரு விசேஷம்னாலோ எண்ணெய் தேய்து குளிப்பது உண்டு .அதுவும் எங்க வீட்டுல சாதாரணமாகவே, வாரத்துக்கு ஒரு தடவை கண்டிப்பாக எண்ணெய் குளியல் உண்டு. அதுவும் தீபாவளின்னா சொல்லவே தேவையில்லை, நடுராத்திரி 5 மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டு நம்மள பாடா படுத்திருவாங்க. ஊரில் இருந்த வரை இந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்த நான், சென்னைக்கு வந்த நாள் முதல் எண்ணெய் குளியலை மறந்தேவிட்டேன். ( நல்ல வேளையாக குளியலை மறக்கலை). சில நாள் முன்பு எங்கள் ஊருக்கு போயிருந்தபோது , இதுபற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது என் நண்பன் ஒருவன், " எங்க அப்பத்தாக்கு கூட போன மாசம் தான் எண்ணெய் குளியல் நடந்தது " என்றான். எனக்கு எதுவுமே புரியவில்லை. பின் அவனே விளக்கினான் , " பல நாட்களாக உடல் நலமில்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கும் பெருசுகள் , தங்களின் சொத்துக்களின் வாரிசுகள் கவனிக்காததால் படுக்கையிலேயே மலம் இருந்துகொண்டும் அதன் மேலையே படுத்துக்கொண்டும் இருக்கும் 90வயதை கடந்தவர்கள் , நன்றாக வாழ்ந்து இன்று நாற்றத்தின் நடுவே வாழ்க்கையை சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த எண்ணெய் குளியல் நடத்தப்படுகிறது. இப்படி அவர்கள் படும் அவஸ்தையை சகிக்க முடியாமலோ , அவர்களையே சகிக்க முடியாத பாசக்கார பிள்ளைகளும் இது போன்ற குளியலை நடத்துவார்கள். சொந்த பந்தங்களுக்கு சொல்லி விட்டு, ஒரு சுப முகூர்த்த திருநாளில் , படுத்திருக்கும் பெருசை எழுப்பி எண்ணெய் தேய்த்து , சீயக்காய் தேய்த்து குளியல் நடத்துவார்கள்.

அதுபோன்ற தள்ளாத வயதில் அவர்களின் உடலில் சூடு இல்லாமல் இருக்கும். இந்த பாசக்கார குளியலை தாங்காத அவர்களின் உடல் மேலும் குளிராகி நிச்சயம் அன்று இரவே ஆவி பிரிந்துவிடும். அவர்களுக்கு பாலூற்றி வழியனுப்பிவிடும் வைபவமும் உண்டு.

இதே போல் என் நண்பனின் தாத்தாக்கதையும்.
என் நண்பனின் தாத்தா மரணப் படுக்கையில் விழுந்து, மருத்துவர்களால் 'இனி தேறாது' என்று கைவிடப்பட்ட சூழ்நிலையில் உறவினர் மற்றும் சுற்றத்தாருக்கும் தகவல் அனுப்பபட்டது.எல்லோரும் வந்தாகிவிட்டது.முதல் சுற்று அழுகை முடிந்து காப்பி சாப்பிட்டு இரண்டாம் சுற்று அழுகைக்கு கூட்டம் போனது.தாத்தாவின் நெஞ்சுக்கூடு எந்த மாற்றமும் இல்லாமல் ஏறியிரங்கியது.முதல் இரவு கழிந்து,அடுத்த இரவும் வந்தது.அழுகை ஓய்ந்து கூட்டம் ரஜினி படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தது.அவ்வப்போது ஒருவர் தாத்தா படுத்திருக்கும் அறைக்கு சென்று எட்டிப் பார்த்துக்கொள்கிறார். தாத்தாவிடம் எந்த மாற்றமும் இல்லை.உடலில் எந்த அசைவும் இல்லை.ஆனால் சீரான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது.அடுத்து வந்த இரண்டு நாட்களும் இப்படியே சென்றது.மெலிதாக கூட்டம் குறையத்தொடங்கியது.'பெரிசு உசிர புடிச்சு வைச்சுருக்கு..கணேசன் வாத்தியாருக்கு சொல்லியனுப்புங்க..ரெண்டு பேரும் அவ்வலவு சினெகிதம்..அவரு பார்த்தாதான் இது உயிர விடும்போல'.. என்றெல்லாம் பேச்சு கிளம்பிவிட்டது.அந்த வீட்டில் காப்பி ஆற்றுவது ஒரு தொடர் செயல் போல் ஆகிவிட்டது.செட்டியார் கடையில் புதிதாக மளிகை லிஸ்ட் கொடுத்தாகிவிட்டது.மாமா குடும்பமும், சித்தப்பா குடும்பமும் இருந்து காரியம் முடித்துவிட்டு செல்லும் திட்டத்தில் வந்திருந்தார்கள்.ஊரில் நிறைய வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.தாத்தா கிளம்புகிற முடிவில் இல்லை.ஒரு வயதான பாட்டி சொன்னாள்..'மண்ணாசை இருந்தாலும் இப்படித்தான் இழுத்திட்ருக்கும்..கொஞ்சம் பாலோடு மண்ணை கலந்து கொடுங்க' என்றாள்.கூட்டம் யோசித்தது.நண்பன் சொன்னான்'பேசாமல்..நைட் எல்லோரும் தூங்கின பிறகு தலையனையோடு அந்த ரூமுக்கு போய்ட்டு வந்துரவா?'என்று.எல்லோரும் பேசி கொஞ்சம் மண்ணை பாலோடு கலந்து தாத்தாவுக்கு கொடுக்கச் சென்றபோது தாத்தா தலைசாய்ந்து மூச்சில்லாமல் இருந்தார்............

இது சரியா தவறா என்ற வாதத்திற்க்கு நான் வரவில்லை. ஆனால் இது போல் நமக்கும் ஒரு நாள் நடக்கும், அன்று நம் சொந்தங்கள் எண்ணெயுடன் வந்தால் ,எதிர்து போரட முடியாததால் , படுத்தேயிருப்போம். அப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருப்போம் என்று சொல்லத்தெரியவில்லை. ( சொல்லத்தெரியவில்லையா இல்லை நினைக்கவே பயமான்னு தெரியல ).