10 August 2008

MEGHE DHAKE TARA - சினிமா

வேலைக்கும் போகும் பெண்களை உங்களில் எத்தனைப் பேருக்குத்தெரியும்?. அதிலும் குறிப்பாக கல்யாண வயதைக்கடந்தும் தன் குடும்ப சூழ்நிலைக்காக எத்தனை பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல்,அலுவலகம் போகும் போதும் அலுவலகத்திலும் எத்தனை எத்தனை ஏளனப் பார்வைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
தன் தங்கைக்காக,தம்பிக்காக எத்தனை அக்காக்கள் தன் இளமையை தொலைத்திருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு அழகான அவலைப்பெண்ணின் கதைதான் MEGHE DHAKE TARA.


ஓய்வுப்பெற்ற ஆசிரியரான அப்பா, அம்மா,எந்த வேலைக்கும் போகாமல் பெரிய பாடகனாக வருவேன் என்று சுத்திக்கொண்டிருக்கும் அண்ணன், கல்லூரிக்குப் போகும் தம்பி , சதா கண்ணாடியில் தன் அழகையே பார்த்துக்கொண்டிருக்கும் தங்கை என நீதாவின் குடும்பம் பெரியது. அப்பாவின் வருமானம் போதாததால் தன் கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் டீயூசன் எடுத்து சம்பாதிக்கிறாள் நீதா.

தன் அண்ணனின் லட்சியத்தை மதிக்கும் நீனா , என்றாவது அவன் சாதிப்பான் என்று எல்லோரிடம் சொல்லிவருகிறாள்.ஆனால் அவனின் அன்றாட தேவைகளுக்கு கூட நீனாவையே சார்ந்திருக்கிறான். நீதாவுக்கும் அவள் அண்ணனுக்கும் நெருக்கமாக பாசம் இருக்கிறது. சிறு வயதில் அவனுடன் ஒரு மலைக்கு போகும் போது எடுத்த புகைப்படத்தை தன் அறையில் எப்போதும் தன் உடனே வைத்திருக்கிறாள்.

ஒரு நாள் சாப்பிடும் போது ஒரே சேலையைக் கட்டிக்கொண்டு தினமும் கல்லூரிக்கு போக முடியாதென்று நீதாவின் தங்கை கீதாவும் , விளையாட்டுப் போட்டிக்கு சூ வாங்க வேண்டும் என்று அவளின் தம்பியும் அம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்துக்கொண்டு இந்த செலவையெல்லாம் செய்ய முடியாது என்று அம்மா திட்டுகிறாள்.
தம்பி தங்கையின் ஆசையை புரிந்து கொள்ளும் நீதா, தான் டியூசன் எடுத்து சம்பாதிக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுக்கிறாள்.

இதற்க்கிடையில் தன் அப்பாவிடம் படித்த பழைய மாணவனான சனத்பாபுக்கும், நீதாக்கும் காதல் மலருகிறது.இருவருக்கும் கடிதபரிமாற்றத்திற்க்கு தங்கை கீதா உதவிசெய்கிறாள். அ வர்களின் காதலும் வளர்கிறது. அடிக்கடி வெளியே சந்திக்கிறார்கள். ஒரு நாள் சனத்பாபுவை சந்தித்துவிட்டு வரும் நீதாவுக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவளின் அப்பா கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்ப்படிருக்கிறது. அதனால் அவரால் இனிமேல் எந்த வேலையும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் அவரை வீட்டிலேயே உக்கார வைத்து விட்டு நீதா வேலைக்கு செல்கிறாள்.
நீதா வேலைக்கு செல்வது அவளின் காதலனான சனத்துக்குப் பிடிக்கவில்லை. அவள் படித்தால் தான் தன் வீட்டில் ஒத்துக்கொள்வார்கள் என்கிறான். ஆனால் குடும்ப நிலைக்காக நீதா வேலைக்கு செல்வேன் என்கிறாள் நீதா. அவர்களின் பேச்சு முற்றி இருவரும் பிரிகிறார்கள்.

நீதா தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.சனத்தும் கீதாவும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள், அவர்களின் சிநேகிதம் காதலில் முடிவடைகிறது. இருவரும் பெற்றோரிடம் பேசுகிறார்கள். மூத்தவள் நீதா இருக்கும் போது இளையவள் கீதாவுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவது என்று அப்பா கேட்கிறார். ”சம்பாதிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு சோத்துக்கு என்ன பண்ணப்போறீங்க” என்கிறாள். அப்பா வாயடைத்து நிற்க்கிறார்.

சனத்துக்கும் கீதாவுக்கும் திருமணம் நடக்கிறது. தன் பழைய காதலனின் திருமணத்தில் கலங்கிய விழிகளுடன் நீதா இருக்கிறாள். இந்த திருமணம் பிடிக்காமல் நீதாவின் அண்ணன் சங்கர் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

நீதா அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டேயிருக்கிறாள். அதிகமாக வேலை செய்ததால் அவளின் உடல்நிலை மோசமாகிறது, அதனால் வீட்டின் வெளியே உள்ள தனிஅறையில் தங்கத்தொடங்குகிறாள்.

பம்பாயிக்கு போன சங்கர் பெரிய பாடகனாக திரும்பி வருகிறான்.
அவனை கேலிசெய்த ஊர் இன்று அவனை பாராட்டி வரவேற்க்கிறது. அதே நேரம் பிரசவத்துக்காக வீட்டிக்கு வந்திருக்கும் கீதா அண்ணனிடம் நெக்லஸ் கேட்கிறாள் , அம்மா மாடி வீடு கட்ட வேண்டும் என்கிறாள். ஆனால் சங்கரோ நீதா எங்கே என்று முதலில் கேட்கிறான்.

வீட்டிலேயே ஒரு தனி அறையில் நீதா இருக்கிறாள். அங்கே போன பின் தான் அவளுக்கு கடுமையான காச நோய் இருப்பதை சங்கர் அறிகிறான். சங்கரின் இன்றைய நிலையைப் பார்த்து நீதா சந்தோசப்படுகிறாள். அவளின் மருத்துவத்துக்காக சங்கர் ஏற்ப்பாடு செய்கிறான்.

சிறுவயதில் சங்கரும் நீதாவும் சென்ற மலைக்கு மறுபடியும் போகிறார்கள். அங்கே அமர்ந்து நீதா தனது பழைய காதல் கடிதத்தைப் படித்த அழுகிறாள். இப்போது குடும்பம் நல்ல நிலையில் இருப்பதாக சங்கர் சொல்கிறான். எல்லாவற்றையும் கேட்ட நீதா, “எனக்கு இப்போ வாழனும்னு ஆசையா இருக்கு “ என்று அழுகிறாள்.


------

குடுப்பத்தின் நலனுக்காக தன்னையே இழந்து ,இன்று குடும்பம் நல்ல நிலைக்கு வந்தவுடன் வாழ ஆசைப்படும் நீதாவின் சொற்க்கள் நியாயமானதாக இருந்தாலும்,அவள் இழந்தது இழந்தது தான்.அந்த உண்மை நமக்கு உறுத்தும் போது கண்ணீர்விடாதவர்களே இருக்கமுடியாது.இன்றும் குடும்பத்தின் நலனுக்காக தனது இழமையை, தனது காதலை தொலைத்து விட்டு டிபன் பாக்ஸோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் எத்தனை பேர்.அவர்களின் ஆசைகளை தியாகம் செய்துகொண்டு தான் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுகிறது.

அற்ப்புதமான ஒளிப்பதிவும் , இசையும் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம்.இந்தியக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும், குடும்பத்துக்காக கனவுகளையும் விருப்பங்களையும் இழந்து நிற்க்கும் பெண்களின் உணர்ச்சிகளை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

படம் பார்த்த பல மணிநேரம் கழித்தும் “ நான் வாழ வேண்டும்... நான் வாழவேண்டும்” என்னும் நீதாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது..

1960 ல் வெளியான இந்தப்படம் இன்றும் ‘மிகச்சிறந்த படங்களின் வரிசையில்’ இருக்கிறது..

Cast: Supriya Choudhury, Anil Chatterjee, Niranjan Ray

Director: Ritwik Ghatak

1 comment:

Nagasubramanian said...

nice sharing. will watch that movie soon.