15 August 2008

என்ன வருத்தம் கண்ணே உனக்கு


இப்பவே என்ன தாயி வருத்தம் ஒனக்கு? .உன் எதிர் காலம் பற்றியா, பள்ளியில் வாத்தியார் அடித்தாரா, நீ கேட்ட மிட்டாயை அம்மா வங்கித்தரவில்லையா ,இல்லை உன் தாய் உன் தந்தையிடம் படும் அவஸ்தைகளை நினைத்தா, நீ கொடுக்க வேண்டிய வரதட்சனையை நினைத்தா, உனக்கு தங்கையாக இருக்கவேண்டிய சிசுவை இன்னொரு பெண் வேண்டாம் என்று சொல்லி கலைக்கவைத்த தாத்தாப் பற்றியா?...
”இல்லை பெண்ணாக பிறந்துவிட்டோமே சோகப்பட்டு பழக்கிக்கொள்வோம் ,வருங்காலத்துக்கு உதவும் என்று தான்”..(இதையெல்லாம் பற்றி நமக்கென்ன கவலை, நான் சுதந்திரம் கொண்டாடிக்கொண்டே, ஒலிம்பிக் பார்ப்போம்)...
பொறுமையாக இருந்தது போதும் கண்ணே, இது அனைத்துக்கும் காரணம் இந்த சமூகம் தான். படி நிறைய படி....... கொத்தடிமையாக இன்னொருவரிடம் வேலை செய்ய தான் உனக்கு பள்ளியில் சொல்லித்தருகிறார்கள், அதையும் தாண்டி படி. வரலாறு படி, அசோகர் பற்றி மட்டுமல்ல , இந்த சமூகமே தாய்வழிச்சமூகம் என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் பெண்ணின் நிலை இருந்தது என்று உணர்.விஞ்ஞானம் படி, நம் உடம்பில் சுரப்பியினால் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் என்று தெரிந்துகொள். அறிவியல் படி , சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் அனைத்தும் பெண்ணை அடிமைப்படித்தும் ஆணாதிக்க சிந்தனை தான் என்றுணர்..
இந்த போலி சமூகத்தை விட்டு வெளியே வா. பெரியார் கண்ட சமூக மாற்றம் வரவேண்டும் என்றால் அது உன்போன்ற பெண்ணால் முடியும்...சீக்கிரம் வா

10 August 2008

MEGHE DHAKE TARA - சினிமா

வேலைக்கும் போகும் பெண்களை உங்களில் எத்தனைப் பேருக்குத்தெரியும்?. அதிலும் குறிப்பாக கல்யாண வயதைக்கடந்தும் தன் குடும்ப சூழ்நிலைக்காக எத்தனை பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல்,அலுவலகம் போகும் போதும் அலுவலகத்திலும் எத்தனை எத்தனை ஏளனப் பார்வைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
தன் தங்கைக்காக,தம்பிக்காக எத்தனை அக்காக்கள் தன் இளமையை தொலைத்திருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு அழகான அவலைப்பெண்ணின் கதைதான் MEGHE DHAKE TARA.


ஓய்வுப்பெற்ற ஆசிரியரான அப்பா, அம்மா,எந்த வேலைக்கும் போகாமல் பெரிய பாடகனாக வருவேன் என்று சுத்திக்கொண்டிருக்கும் அண்ணன், கல்லூரிக்குப் போகும் தம்பி , சதா கண்ணாடியில் தன் அழகையே பார்த்துக்கொண்டிருக்கும் தங்கை என நீதாவின் குடும்பம் பெரியது. அப்பாவின் வருமானம் போதாததால் தன் கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் டீயூசன் எடுத்து சம்பாதிக்கிறாள் நீதா.

தன் அண்ணனின் லட்சியத்தை மதிக்கும் நீனா , என்றாவது அவன் சாதிப்பான் என்று எல்லோரிடம் சொல்லிவருகிறாள்.ஆனால் அவனின் அன்றாட தேவைகளுக்கு கூட நீனாவையே சார்ந்திருக்கிறான். நீதாவுக்கும் அவள் அண்ணனுக்கும் நெருக்கமாக பாசம் இருக்கிறது. சிறு வயதில் அவனுடன் ஒரு மலைக்கு போகும் போது எடுத்த புகைப்படத்தை தன் அறையில் எப்போதும் தன் உடனே வைத்திருக்கிறாள்.

ஒரு நாள் சாப்பிடும் போது ஒரே சேலையைக் கட்டிக்கொண்டு தினமும் கல்லூரிக்கு போக முடியாதென்று நீதாவின் தங்கை கீதாவும் , விளையாட்டுப் போட்டிக்கு சூ வாங்க வேண்டும் என்று அவளின் தம்பியும் அம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்துக்கொண்டு இந்த செலவையெல்லாம் செய்ய முடியாது என்று அம்மா திட்டுகிறாள்.
தம்பி தங்கையின் ஆசையை புரிந்து கொள்ளும் நீதா, தான் டியூசன் எடுத்து சம்பாதிக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுக்கிறாள்.

இதற்க்கிடையில் தன் அப்பாவிடம் படித்த பழைய மாணவனான சனத்பாபுக்கும், நீதாக்கும் காதல் மலருகிறது.இருவருக்கும் கடிதபரிமாற்றத்திற்க்கு தங்கை கீதா உதவிசெய்கிறாள். அ வர்களின் காதலும் வளர்கிறது. அடிக்கடி வெளியே சந்திக்கிறார்கள். ஒரு நாள் சனத்பாபுவை சந்தித்துவிட்டு வரும் நீதாவுக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அவளின் அப்பா கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்ப்படிருக்கிறது. அதனால் அவரால் இனிமேல் எந்த வேலையும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். அதனால் அவரை வீட்டிலேயே உக்கார வைத்து விட்டு நீதா வேலைக்கு செல்கிறாள்.
நீதா வேலைக்கு செல்வது அவளின் காதலனான சனத்துக்குப் பிடிக்கவில்லை. அவள் படித்தால் தான் தன் வீட்டில் ஒத்துக்கொள்வார்கள் என்கிறான். ஆனால் குடும்ப நிலைக்காக நீதா வேலைக்கு செல்வேன் என்கிறாள் நீதா. அவர்களின் பேச்சு முற்றி இருவரும் பிரிகிறார்கள்.

நீதா தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.சனத்தும் கீதாவும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள், அவர்களின் சிநேகிதம் காதலில் முடிவடைகிறது. இருவரும் பெற்றோரிடம் பேசுகிறார்கள். மூத்தவள் நீதா இருக்கும் போது இளையவள் கீதாவுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவது என்று அப்பா கேட்கிறார். ”சம்பாதிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு சோத்துக்கு என்ன பண்ணப்போறீங்க” என்கிறாள். அப்பா வாயடைத்து நிற்க்கிறார்.

சனத்துக்கும் கீதாவுக்கும் திருமணம் நடக்கிறது. தன் பழைய காதலனின் திருமணத்தில் கலங்கிய விழிகளுடன் நீதா இருக்கிறாள். இந்த திருமணம் பிடிக்காமல் நீதாவின் அண்ணன் சங்கர் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

நீதா அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டேயிருக்கிறாள். அதிகமாக வேலை செய்ததால் அவளின் உடல்நிலை மோசமாகிறது, அதனால் வீட்டின் வெளியே உள்ள தனிஅறையில் தங்கத்தொடங்குகிறாள்.

பம்பாயிக்கு போன சங்கர் பெரிய பாடகனாக திரும்பி வருகிறான்.
அவனை கேலிசெய்த ஊர் இன்று அவனை பாராட்டி வரவேற்க்கிறது. அதே நேரம் பிரசவத்துக்காக வீட்டிக்கு வந்திருக்கும் கீதா அண்ணனிடம் நெக்லஸ் கேட்கிறாள் , அம்மா மாடி வீடு கட்ட வேண்டும் என்கிறாள். ஆனால் சங்கரோ நீதா எங்கே என்று முதலில் கேட்கிறான்.

வீட்டிலேயே ஒரு தனி அறையில் நீதா இருக்கிறாள். அங்கே போன பின் தான் அவளுக்கு கடுமையான காச நோய் இருப்பதை சங்கர் அறிகிறான். சங்கரின் இன்றைய நிலையைப் பார்த்து நீதா சந்தோசப்படுகிறாள். அவளின் மருத்துவத்துக்காக சங்கர் ஏற்ப்பாடு செய்கிறான்.

சிறுவயதில் சங்கரும் நீதாவும் சென்ற மலைக்கு மறுபடியும் போகிறார்கள். அங்கே அமர்ந்து நீதா தனது பழைய காதல் கடிதத்தைப் படித்த அழுகிறாள். இப்போது குடும்பம் நல்ல நிலையில் இருப்பதாக சங்கர் சொல்கிறான். எல்லாவற்றையும் கேட்ட நீதா, “எனக்கு இப்போ வாழனும்னு ஆசையா இருக்கு “ என்று அழுகிறாள்.


------

குடுப்பத்தின் நலனுக்காக தன்னையே இழந்து ,இன்று குடும்பம் நல்ல நிலைக்கு வந்தவுடன் வாழ ஆசைப்படும் நீதாவின் சொற்க்கள் நியாயமானதாக இருந்தாலும்,அவள் இழந்தது இழந்தது தான்.அந்த உண்மை நமக்கு உறுத்தும் போது கண்ணீர்விடாதவர்களே இருக்கமுடியாது.இன்றும் குடும்பத்தின் நலனுக்காக தனது இழமையை, தனது காதலை தொலைத்து விட்டு டிபன் பாக்ஸோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் எத்தனை பேர்.அவர்களின் ஆசைகளை தியாகம் செய்துகொண்டு தான் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுகிறது.

அற்ப்புதமான ஒளிப்பதிவும் , இசையும் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம்.இந்தியக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும், குடும்பத்துக்காக கனவுகளையும் விருப்பங்களையும் இழந்து நிற்க்கும் பெண்களின் உணர்ச்சிகளை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

படம் பார்த்த பல மணிநேரம் கழித்தும் “ நான் வாழ வேண்டும்... நான் வாழவேண்டும்” என்னும் நீதாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது..

1960 ல் வெளியான இந்தப்படம் இன்றும் ‘மிகச்சிறந்த படங்களின் வரிசையில்’ இருக்கிறது..

Cast: Supriya Choudhury, Anil Chatterjee, Niranjan Ray

Director: Ritwik Ghatak

03 August 2008

கேள்வியும் நானே பதிலும் நானே


கேள்வி: எதற்க்காக இந்த தளம்?
பதில்: பல நல்ல பிறமொழி திரைப்படங்களை அறிமுகப்படுத்தவும், அதைப் பற்றி விவாதிக்கவும்,அதன் மூலம் நம் மக்கள் பல்வேறு நாட்டின் கலைத்திறனையும் ,கலாச்சாரத்தையும், வியக்கவும் ரசிக்கவும் முடியும்.அவர்களிடம் சினிமா என்றால் என்ன என்பது விளங்கி அதன் மூலம் தமிழ் சினிமாவின் தற்ப்போதைய போக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும்.இந்த கள உறுப்பினர்கள் அதை தொடங்கிவைப்பார்கள், சிறுதுளி பெருவெள்ளம் என்பதை நம்புவர்கள் நாங்கள்.

தமிழ்சினிமாவில் என்ன மாற்றம் வேண்டும்?

எங்களுக்கான சினிமா இல்லை இது. அங்கேயெல்லாம் சினிமாவை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார்கள், நாம் மட்டும் அது ஏதோ வானத்தில் நடப்பதைப்போல் கதை அமைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்களுக்கு தெரிந்தவரை இந்தியாவில் மாதச்சம்பளம் வாங்குபவனும்,விவசாயியும் தான் அதிகமாக வாழ்கிறார்கள்.ஆனால் எங்கள் நாயகன் யாரும் விவசாயியாகவோ மாதச்சம்பிளக்காரனாகவோ நடிப்பதில்லை.அப்படியே ஒரு படம் எடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளமுடியாதபடி மக்களின் மனநிலையை மாற்றிவைத்திருக்கிறார்கள்.அஞ்சு பாட்டும்,சண்டையையும் வைத்துக்கொண்டு சினிமாவை முடித்துவிடலாம் என்பது தான் இங்கே பெரும்பான்மையான கருத்து. நமக்கு பக்கத்து நாடான் ஈழத்திலிருந்து கூட அருமையான படங்கள் வரும் போது நாம் மட்டும் இன்னும் பாட்டையும் சதையையும் மட்டும் நம்பி படம் எடுக்கிறோம்.

சரி , பாட்டே இல்லாமல் தமிழ் சினிமா எடுத்தா , அதை நல்ல சினிமா னு ஏத்துப்பீங்களா?

என்ன கேள்வி இது, வெள்ளிக்கிழமையின் ஒளியும் ஒலியும் கேட்டு தான் எங்களில் பல பேர் தூங்கியிருக்கோம். இளையராஜா இசையமைக்க ஆரம்பித்த பின் எந்த தாயும் தாலாட்டு பாடுவதாக தெரியவில்லை.அதனால் இசையின் முக்கியத்துவமும் மகத்துவமும் எங்களுக்கும் தெரியும். சினிமாவில் பாட்டு என்பது வேண்டுமா வேண்டாமா என்பது உங்கள் இஷ்டம், ஆனால் சினிமாவை சினிமாவா எடுங்க .

எதுக்காக சினிமாவை மாத்தனும்னு சொல்றீங்க?

சினிமா என்பது ஒரு அற்ப்புதமான் ஆயுதம்,நாம் அதை வைத்து முதுகு சொறிந்து கொண்டிருக்கிறோம்.
சனிக்கிழமையின் சினிமாவுக்காக தனது மாச Budjet ல் கொஞ்சம் ஒதுக்கிவைத்து உங்ககிட்டவந்து கொடுக்கிறானே அவனுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா, அதனால் அவனுக்காகவேனும்,
தமிழ்சினிமாவின் இந்தநிலையிலும் அதை நம்பி வடபழனியிலும் சாலிகிராமத்திலும், சிகரெட்டை மட்டுமே உணவாக கொண்டு, பல வருடம் பசியோடு இருந்தாலும் , தமிழ் சினிமாவில் உலகத்தரத்துக்கு நான் படம் எடுப்பேன் என்று நம்பி ஆயிரம் பேருக்கு மேல் உதவி இயக்குனராய் சுற்றிவருகிறார்கள், அவர்க்காகவேனும்,

தமிழ்சினிமாவின் போக்கு மாறித்தான் ஆகவேண்டும்.

தமிழ்சினிமாவில் நல்ல படமே இல்லை என்கிறீர்களா?

நாங்கள் என்ன தான் பிறமொழி படம் பார்த்தாலும் எங்களுக்கு அங்குலம் அங்குலமாக சினிமாவை ரசிக்க கற்றுக்கொடுத்தது “ உதிரிப்பூக்கள் “ தான். அது ஒரு புத்தகம் போல், எங்களுக்கு தொழில் (சினிமா) சொல்லிக்கொடுத்தது. ”முள்ளும் மலரும்” ,சத்தியமாக தமிழுக்கு இலக்கணம் எழுதியது யாருன்னு தெரியாது ஆனால் தமிழ் சினிமாவுக்கு மகேந்திரன் தான். இது மாதிரி மொத்தமா பார்த்தா ஒரு பத்து படம் தேர்ரதே கஷ்டம். மிச்ச இருக்கிறதெல்லாம் குப்பைங்க.
(குப்பைங்க-கடுமையாக இருந்தாலும் அது நிதர்சனமான உண்மை).ஆம் நண்பர்களே நாம் இது வரை பார்த்தது எல்லாம் படங்களே இல்லை , சினிமாவே இல்லை . மெருகேற்றிய நீலப்படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நல்ல படம் பார்ப்போம்.... நல்ல படம் மட்டுமே பார்ப்போம்...
நல்ல படம் எடுப்போம் .. நல்ல படம் மட்டுமே எடுப்போம்.

02 August 2008

உலக சினிமா – இந்த பாமரனின் பார்வையில்


பள்ளிக்காலங்களில் நண்பர்கள் புடைசூள, சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு போகமுடியாத்தால் தான் அடிக்கடி திரை அரங்குகளுக்கு சென்று வந்திருக்கிறேன்.அது வரை சினிமா மீது துளியும் ஆர்வம் இல்லாமல், சரக்கு அடிப்பது,இல்லையேல் புத்தகம் புத்தகம் என்று இருந்திருக்கிறேன்.


கல்லூரிக்காக சென்னை வந்த பின் திரைவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் தயவினாலும், வழிகாட்டினதாலும் கடந்த சில வருடங்களாக நான் பல அருமையான படங்களைப் ரசித்திருக்கிறேன்.

அடிதடி,ஒரு பாட்டு கூட இல்லாத சினிமாவை ரசிக்க ஆரம்பித்து , பின் அதன் மேல் காதல் வயப்பட்டது அப்போது தான்.ஒரு அளவுக்கு மேல்,உலக சினிமாவுக்கு ஒரு அடிமைபோல் , தினம் ஒரு படமாவது பார்க்க வேண்டும் என்ற அளவுக்கு,சோத்துக்கே வழியில்லாதப்ப கூட பார்சன் காம்ப்ளக்‌ஸ் வாசலில் போய் நின்றிருக்கிறேன். சில நாட்கள் கடன் சொல்லியாவது சிடி வாங்கிவந்து பார்த்தாக வேண்டிய அளவுக்கு வெறியனாகவே மாறியிருந்தேன்.

இன்று வரும் தமிழ் சினிமா மீதுள்ள கோபமும்,நான் பார்த்து ரசித்த பிற மொழிப்படங்களின் தாக்கமும், கடந்த சில வருடங்களாகவே திரைஅரங்கத்திற்க்கு செல்வதை விட்டு விட்டேன்.எத்தனையோ சினிமா பார்த்தாலும், யாரேனும் “ நல்ல சினிமா எப்படி இருக்கணும் “ என்றால் தயங்காமல் சொல்வேன் “உதிரிப்பூக்கள்” .அந்தப்படத்தைப் பார்த்தாலே போதும், ஒரு நல்ல சினிமாவின் இலக்கணம் புரிந்துவிடும்.

சினிமா என்பது வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படவேண்டும், அது ஏதோ எங்குமே நடக்காத சம்பவங்களை மட்டும் கொண்டிருக்க கூடாது. (ஒருவனே பத்து பேரை அடிப்பது, காதல் வசப்பட்டால் பாட்டு உடனே எப்படித்தான் வருதோ).உலக சினிமாவில் பிண்ணனி இசை என்பது நடக்கும் சம்பவங்களை நம் மூளையையும் தாண்டி உணர்வுகளை தொட்டு இழுக்க பயன்படுத்துகிறார்கள். நாம் தான் இன்னும் தையதக்கானு குதிச்சிட்டு இருக்கோம்.

நான் பார்த்த படங்கள் பல நாட்கள் இரவு தூக்கத்தை விழுங்கியிருக்கிறது.நாயகனும் நாயகனும் ஒன்னு சேர வேண்டும் இல்லேனா பிரிய வேண்டும் , இது தான் தமிழ் படங்களின் தலையெழுத்து, ஆனால் உலக சினிமாவில்(நிறைய படங்களில்) இறுதியில் மெல்லிய இசையுடம் முடிவை நம் தலையில் இறக்கிவிட்டு, அவங்க பாட்டுக்கு போய்டுவாங்க இரவு பூரா அவங்களுக்காக அழுதிருக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், ஒரு பாட்டியையும் பேரனையும் மட்டும் வைத்துக்கொண்டு எடுத்த “The Way Home” ல் , அந்த பாட்டிக்காக நான் உண்ர்ச்சி வசப்பட்டது என் வாழ்வில் வேறு எப்போது நடந்திராதது. ஒரு படத்தின் வெற்றி என்பது இது தான் , பார்ப்பவர்களின் மனதில் ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். அந்த தாக்கம் குறைந்தபச்ச்ம் ஒரு நாளாவது நம்மளை பாடாய் படுத்தணும்.

இது எல்லாம் இருக்கிறது உலக சினிமா, எதுவுமே இல்லாம அஞ்சு பாட்டும் , ஒரு சண்டையும் உள்ளது நம்ம சினிமா...