24 December 2007

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே....

நாயுடுன்னு சொன்னாலே , எங்க ஊரு கிருஷ்ணசாமி நாயுடு தான் ஞாபகத்துக்கு வருவாரு.எங்க ஊர்ல எல்லார்க்குமே அவர பார்த்தா ஒரு மரியாதை இருக்கும். எப்பவும் கஞ்சி போட்ட சட்டையும் வெள்ள வேட்டியுமாத்தான் இருப்பாரு. வகுப்புக்கு போற எங்கள புடிச்சி சாக்லெட்டு வாங்கி கொடுத்து , ' சீக்கிரம் படிச்சி கலெக்டராயி வாங்கடா ' னு சொல்வாரு.
ஒரு சின்ன வாய்க்கா தகராருல , பக்கத்து தெரு ஆறுமுகம் மேல வழக்கு போட்டாரு.அதுக்கு பழிவாங்குவதர்காக ஆறுமுகம், நாயுடுவின் 17வயது மகளை கெடுத்து கொலையும் செய்தான்.

ஒரு தனி மனிதனையோ , குறிப்பிட்ட சமூகத்தையோ , மதத்தையோ கேவலப்படுத்த நினைத்தால், 'அவர்கள் ' சமூகத்தை சேர்ந்த பெண்களை பலாத்காரம் செய்து அதன் மூலம் எதிரிகளை பழி வாங்கிவிட்டதாக நினைக்கின்றனர். பிற சமூகத்தைத் சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்துவது , அவர்களுடைய மதத்தை ,நம்பிக்கைகளை , மானத்தை கெடுப்பதாக நம்பிக்கொண்டு வருகின்றனர்.


பெண்ணின் உடம்பு மீது செய்யும் ஆக்ரமிப்பு , பிற சமூகத்தினர் மீது நாட்டிய வெற்றிக்கொடியானது. பெண்ணின் மேல் நடத்திய வன்முறைக்கு இந்திய சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கல்ல. அவர்களின் மார்பகங்களை அறுத்து , அந்தரங்க உறுப்பின் மீது பிற மதசின்னங்களை வரைந்து, அந்த ஓலங்களின் நடுவேதான் நாம் தேசியகீதம் பாடினோம்.

நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, பெண் மேல் செலுத்தப்படும் வன்முறை ஏட்டுச்சுரக்காயாக இருக்கலாம். ஆனால் இன்றும் உலகமெங்கும் எங்கு கலவரம் வெடித்தாலும், முதலில் பாதிக்கப்படுவது பெண்ணினம் தான்.

இதையெல்லாம் வர்க்க போராட்டமாக நாம் சித்தரிக்க முடியாது. ஆம், நம் நாட்டிற்க்கு முதலில் தேவை
மார்க்ஸ் இல்லை, நம்ம ஈரோட்டு ராமசாமி நாயக்கர் தான்.

No comments: